உங்களுக்குப் பெண் குழந்தை பிடிக்குமா, ஆண் குழந்தை பிடிக்குமா? ஏன்?
குழந்தைகள் என்றாலே ரொம்ப பிடிக்கும்.
இப்படி பொதுவாக சொன்னாலும் பெரும்பாலான ஆண்களுக்கு மனதின் ஓரத்தில் ஏதோ ஒரு மூலையில் பெண் குழந்தைகள் மீதான பிரியம் ஒரு நூலளவு ஆண் குழந்தைகளை விட அதிகமாகவே உள்ளது.
சிறு வயதில் இருந்து விவரம் தெரிந்த பிறகு ஓரளவு தூக்கிக் கொஞ்சியது என் கடைசி சித்தி மகள் பொற்செல்வி.
அதன்பின் சித்தி மகன் அருள்செல்வம்.
இவர்கள் இருவரும் குழந்தையாக இருக்கும் போதே வீட்டை விட்டு வேலைக்காக பெங்களூர் வந்தாயிற்று. அதன்பின் விடுமுறை விசேஷங்களுக்கு செல்லும் போது மட்டுமே! இருவரும் கடைக்குட்டி நான் மூத்தவன் என்பதால் என் தங்கை தம்பியிடம் ஒட்டும் அளவிற்கு என்னிடம் அவ்வளவாக விளையாடியதும் இல்லை.
இரண்டு வருடங்கள் கழித்து ஊரில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் போது அப்பாவிடம் பணிபுரிந்தவர்களின் குழந்தைகள் மற்றும் அண்ணன் மகன் என வரிசையாக ஐந்தும் ஆண் குழந்தைகள். பிரதீஸ்,வைசாந்த், ரித்தீஷ்,தஷ்வந்த்,
இவர்கள் வளரும் போது எனக்கு திருமணம் முடிவான போது மனைவியின் அக்கா மகள் இதழிகா பேச ஆரம்பிக்கும் போது அழகான மழலை மொழியில் சித்தப்பா என அழைக்கும் போது அவ்வளவு ஆசையாக இருந்தது.
என்னதான் இந்த ஐந்து ஆண் பிள்ளைகள் மாமா, சித்தப்பா,அண்ணா என அழைக்கும் போது இல்லாத சந்தோஷம் அப்போது கிடைத்தது.
அடுத்ததாக என் தங்கையின் மகள் ஐரா பிறந்ததும் தான் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் மீது பிரியம் சற்று அதிகமானது என்றே சொல்லலாம்.
அதே சமயம் என் மனைவியும் கருவுற்றிருக்கும் போது எனக்கு பெண் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என ரொம்ப ஆசைப்பட்டேன்.
கடவுள் எல்லோருடைய ஆசையையும் கேட்டவுடன் நிறைவேற்றுவதில்லை.
ஆண்குழந்தைகளை விட உனக்கு பெண் குழந்தைகளின் மீதான பிரியம் அதிகம் இருக்கிறது. ஒரு ஆண் குழந்தையின் அன்பை உணர்ந்து பார் என்று நினைத்தார் போல
என் மனைவி அழகான அன்பான என்னைப் போலவே பெண் குழந்தைகளின் மீது பிரியம் உள்ள ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இப்போது என் மகன் பிறந்த பின்னர் பெண் குழந்தை பிடிக்குமா ஆண் குழந்தை பிடிக்குமா என்று கேள்விக்கு முதல் வரியே பதிவாகிறது.
Tags
சுவாரசியமான தகவல்கள்