திருமணத்திற்கு முன் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயம் என்ன?
திருமணம் செய்து கொள்ள பலவற்றையும் கருத்தில் கொண்டே முடிவெடுக்கிறார்கள். திருமண பந்தத்தில் இணையும் ஆண்-பெண் இருவருக்கும் ஜாதக பொருத்தம் பார்க்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இருவரில் யாராவது ஒருவருக்கு தோஷம் இருந்தாலும் அதனை போக்குவதற்கும் முயற்சி எடுப்பார்கள்.
இன்றைய காலகட்டத்தில் மருத்துவ ரீதியான சில பரிசோதனைகள் மேற்கொள்வதற்கும் இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். ரத்த பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். திருமணத்திற்கு முன்பு மணமகனும், மணமகளும் செய்ய வேண்டிய அத்தியாவசியமான மருத்துவ பரிசோதனைகள் குறித்து பார்ப்போம்.
எச்.ஐ.வி மற்றும் பால்வினை நோய்கள்
எச்.ஐ.வி-எய்ட்ஸ், சிபிலிஸ், கோனோரியா, ஹெர்பெஸ், சான்கிராய்டு போன்றவை பால்வினை நோய்கள்(எஸ்.டி.டி) என்று அழைக்கப்படுகின்றன. இவை பாலியல் உறவுகள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவிவிடக்கூடும். அதிலும் எய்ட்ஸ் ஆபத்தானது. இத்தகைய பரிசோதனைகள் செய்வதன் மூலம் திருமணத்திற்கு பிந்தைய பாதிப்புகளில் இருந்து தப்பித்துவிடலாம்.
ரத்த வகை
திருமணத்திற்கு முன்பு துணையின் ரத்த வகையை அறிந்து கொள்வதும் நல்லது. அது பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். மனைவிக்கு ஆர்.எச் நெகட்டிவ் ஆகவும், கணவருக்கு ஆர்.எச் பாசிட்டிவ்வாகவும் இருந்தால் அது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அதனால் அதனை முதலிலேயே கண்டறிந்து அதற்குரிய ஊசி மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
கருவுறுதல் சோதனை
இன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் தாமதமாகத்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்படி தாமதமாக திருமணம் செய்வது கருத்தரிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆதலால் ஆண், பெண் இருவரும் கருவுறுதலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருக் கின்றார்கள் என்பதற்கான பரிசோதனையை செய்து கொள்வது நல்லது.
மரபணு சோதனை
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயம், சிறுநீரகம், கல்லீரல் நோய், மார்பக புற்றுநோய் போன்ற பல நோய்கள் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். திருமணத்திற்கு முன்பே இருவரும் அவரவர் குடும்பத்தினரின் மருத்துவ நிலையையும், நாள்பட்ட நோய்கள் பற்றிய விவரத்தையும் தெரிந்து கொள்வதன் மூலம் பின்னாளில் ஏற்படும் உடல்நல பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
மனநல பரிசோதனை
ஆண், பெண் இருவருமே நல்ல மன நிலையில் இருந்தால்தான் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக அமையும். அதனால் இருவருக்கும் தேவைப்பட்டால் மன நலம் சார்ந்த பரிசோதனைகளும் அவசியம்.
Tags
சுவாரசியமான தகவல்கள்