நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் (arranged marriages) நிலவும் குறைகள் என்ன?

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் (arranged marriages) நிலவும் குறைகள் என்ன?


நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் (arranged marriages) நிலவும் குறைகள் என்ன?


குறைகள் மட்டுமே நிலவும்.
நிறைகள் என்று எதுவும் சொல்வதற்கில்லை.

இதன் அடிப்படை யாதெனில், "நிச்சயிக்கப்பட்ட திருமணம்" என்பது இருவீட்டார் சம்மதத்துடன், ஒரு ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணையும் மங்கள நிகழ்வாகும். இந்த திருமண நிகழ்வு நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று அறியப்படுவதன் காரணம், திருமண பந்தத்தில் இணையப்போகும் இருவரும் முன்னர் காதலில் ஈடுபட்டிருக்கவில்லை என்பதும் இரு வீட்டாராகிய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அவர்கள் திருமண பந்தத்தில் இணைகிறார்கள் என்பதாகும்.

ஏற்கனவே காதலில் ஈடுபட்டிருந்த இருவரும் பெரியோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமண பந்தத்தில் இணைந்தாலும் அது "காதல் திருமணம்" என்றே அறியப்படும். இதனால் இந்த திருமண நிகழ்வு அல்லது குறித்த சடங்கு, சம்பிரதாயங்கள் நடைபெறும் போது குறித்த மணமக்கள் இருவருக்கும் இடையில் "காதல்" என்பது இல்லை என்று அறியலாம். ஆக, இந்த நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் "காதல்" என்பது இல்லை என்பது அடிப்படையாகும்.

"திருமண வாழ்க்கை" அல்லது "தாம்பத்ய வாழ்க்கை" என்பது அறுசுவை உணவு போலவும் "காதல்" என்பது அதன் சாரமாகிய "உப்பும்" போன்றது. அது சாதமாக இருந்தாலும், பச்சடியாக இருந்தாலும், உறைப்பு அல்லது புளிப்பாக இருந்தாலும் உப்பு அவசியம் சேர்க்கப்பட வேண்டிய ஒன்றாகிறது. உப்பில்லாத பண்டம் போல பலருடைய திருமண வாழ்க்கை குப்பையாகி விடுவதற்கு அவ்ர்கள் இருவருக்கிடையில் காதல் இல்லாமையே பிரதானமான காரணம் ஆகும்.

ஆனாலும், பெரியவர்களுடைய வாதம் என்னவென்றால், "எங்கள் திருமணம் கூட நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான். ஆனாலும் நாங்கள் சேர்ந்து வாழ வில்லையா?" என்பதாகும். திருமணத்திற்கு பின்னர் உண்டாகும் காதல் ஒரு கட்டாயமாகின்றது. எப்படியும் வாழ்ந்து தானே ஆக வேண்டும் என்ற அடிப்படையில் அது உருவாகும்.

ஆனால் திருமணத்திற்கு முந்திய காதல் குறித்த இருவரும் அறிமுகமாகி, ஒருவரோடு ஒருவர் பழகி, ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இனி திருமண பந்தத்தில் இணையலாம் என்ற அடிப்படைப் புரிந்துணர்வு மூலம் உண்டானதாகும்.

உண்மையில் திருமண பந்தத்தில் இணையப்போகும் இருவருக்கிடையில் காதல் என்பது ஏன் அவசியமாகிறது என்றால், திருமண வாழ்க்கையில் இன்பம், துன்பம் என்பன மேடு, பள்ளம் போல மாறி மாறி வரும். வாழ்க்கையின் அடிப்படையும் அதுவே. அவ்வாறான இக்கட்டான சூழ் நிலைகளில் ஒருவருகொருவர் ஆறுதலாக இருப்பதன் மூலம் திருமண வாழ்க்கையில் வெற்றி காணலாம்.

அதற்கு ஒருவரையொருவர் புரிந்து கொள்வது அவசியமாகும். பொதுவாக, பெண்கள் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்வதன் மூலமே குடும்பத்தைக் கொண்டு நடாத்துகிறார்கள். குறிப்பாக, இந்த நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்களே ஆகும்.

பெண்கள் பெரும்பாலும் சூழ் நிலைகளால் ஆளப்படுகிறார்கள். இதனாலேயே பெண்களை நாம் "சூழ்நிலைக் கைதிகள்" என்று சொல்கிறோம். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் பெண்கள் சூழ்நிலைக்கைதிகளாக இருக்கிறார்கள். ஏன் சில ஆண்களும் கூட, பெற்றோர் முடிவுக்காக சூழ்நிலைக் கைதிகள் ஆகும் சந்தர்ப்பங்களும் உண்டு.

ஒரு இந்து குடும்பத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் ஆரம்பம் ஜாதகக் குறிப்பில் தொடங்குகிறது. ஒரு செவ்வாய் தோஷமுடைய பெண்ணுக்கு இன்னொரு செவ்வாய் தோஷமுடைய ஆணையே திருமணம் செய்து வைக்கக் கூடும் என்று நம்பப்பட்டால், அந்தப் பெண்ணுக்கு மற்ற தோஷமற்ற பெண்களை விட தெரிவுகள் குறைவு. காலமும் குறைவு என்பதால் அவள் யாரையாவது சம்மதிக்க வேண்டிய ஒரு கட்டாய சூழ் நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

இதையும் தாண்டி, ஜாதி, மதம் என்ற பாகுபாடுகளுடைய குடும்பங்களில் அவளுக்கான தெரிவு ஒரு குறுகிய வட்டதிற்குள்ளேயே இருக்கும். அவளால் அந்த வட்டத்தை விட்டு வெளியில் வர இயலாமல் இருக்கும். அதனால் காலப்போக்கில் "யாருக்காவது கழுத்தை நீட்டுவோம்" என்ற முடிவுக்கு வந்து விடுகிறாள்.

இதனால் வெறுமனே அந்த பெண்ணின் வாழ்க்கை மட்டுமல்ல, குறித்த ஆணின் வாழ்க்கையும் கூட சேர்த்து பாதிக்கப்பட்டு விடுகிறது. சிறு சிறு சண்டைகளில் தொடங்கி வாழ்க்கை நரகமாகி விட விவாகரத்து, தற்கொலை வரை செல்லும் நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். இவர்கள் வாழ்க்கை இவர்களோடே சேர்த்து இவர்கள் குழந்தைகளையும் பாதித்து விடுகிறது.

இதை இரண்டாம் பட்சமாய் வைத்துக் கொண்டு, காதல் இல்லாத ஒரு தாம்பத்ய உறவை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அறிமுகமாகி ஒரு குறுகிய கால்ப்பகுதிக்குள்ளேயே எதிர்பாலான ஒருவருடன் தனது நிர்வாணத்தை வெளிப்படுத்தி உடலுறவு மேற்கொள்வது என்பது, ஒரு பெண்ணின் பார்வையில் பார்த்தால், இது ஏறத்தாழ ஒரு கற்பழிப்புக்கு சமமாகவும், ஒரு ஆணின் பார்வையில் பார்த்தால், இது ஏறத்தாழ ஒரு விலைமாதுவுடன் உடலுறவு வைத்துக் கொள்வதற்கு சமமான ஒன்றாகும்.

ஏனெனில் அங்கும் காதல் இல்லாத இரு உடல் சேரும் நிகழ்வே இடம்பெறுகிறது.

சரி, கொஞ்சம் காலம் கழித்து வைத்துக் கொள்வோம் என்றால் கூட, அதுவும் எப்படியும் ஒரு கட்டாயத்தினாலேயே ஆகும். திருமணம் நடந்தாயிற்று. இனி என்ன என்ற சூழ் நிலை.

பெரும்பாலும் இவற்றைக் குறித்து எமது முந்தைய தலைமுறையினர் சிந்திப்பதில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். வாழ்க்கை என்பது பழக்கம் தானே என்கிற வாதமும் எல்லாம் பழகி விடும் என்ற எண்ணமுமே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நிகழ்வதற்கு ஏதுவாக அமைகின்றன.

காதலித்து திருமணம் செய்யுங்கள். வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும். அவ்வாறான காதல் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களாக இருக்கும். உங்கள் காதலை அன்றாடம் கண்டு, உங்கள் பிள்ளைகளும் காதலித்தே திருமணம் செய்யும். அவர்கள் தலைமுறையும் சொர்க்கமாக இருக்கும்.

இரு மனம் சேரும் நிகழ்வே திருமணம் எனப்படும். இங்கு இருவரின் நிமித்தம் இரு குடும்பங்கள் ஒன்று சேரும். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் இரு மனம் சேராதிருக்க அது எவ்வாறு திருமணம் என்றாகும்.

அது வெறும் கல்யாணம் எனப்படும். கல்யாணம் எனப்படுவது இரு குடும்பங்கள் ஒன்று சேரும் நிகழ்வாகும். இங்கு இரு குடும்பங்களின் நிமித்தம் இருவர் கட்டாயத்தினால் ஒன்று சேருவர். இது ஏறத்தாழ இரண்டு கற்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு ஒத்ததாகும்.

"ஆதலால் காதல் செய்வீர்; காதல் செய்து திருமணம் செய்வீர்; காதல் திருமணம் செய்து பதினாறும் பெறுவீர்; பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்"
Previous Post Next Post

نموذج الاتصال