முன்னோர்கள் முட்டாள் இல்லை - சம்மணமிட்டுச் சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகள் இருக்கா


சம்மணம்… சப்பணங்கால்… சப்பணங்கட்டு. முழங்கால்களை மடக்கி, தரையில் அமரும் முறைக்கு பல பெயர்கள். சம்மணமிடுவதை சுகாசனம் என்றுகூடச் சொல்வார்கள். நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டதும் உடலுக்கு வலிமை அளிக்கக்கூடியதிலும் மிக முக்கியமானது சம்மணமிட்டுச் சாப்பிடுவது.


டைனிங் டேபிள்களும் குஷன் மெத்தைகளும் ராஜாராணி கட்டில்களும் நம்மைத் தரையிலிருந்து பிரித்து மிகவும் வசதியாக நம்மை மிதக்கச் செய்துவிட்டன. வசதி வாய்ப்பு கூடிப்போனதால் நாம் இப்படியே வாழ்நாளைக் கழிக்கிறோம்; கூடவே நோய்களையும் சேர்த்து சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். குனிந்து நிமிர்ந்து இடுப்புப் பகுதிக்கு பயிற்சி கொடுக்க அவகாசம் இல்லாததால், இடுப்பைச் சுற்றி சதைத் தொகுப்புகள் திரண்டு உருண்டு நிற்கின்றன. சம்மணம் போட்டு வேலைகளைச் செய்தபோதும் உட்கார்ந்து சாப்பிட்டபோதும் நமது உடலில் இயல்பாக இருந்த நெகிழ்வுத் தன்மையை இப்போது தொலைத்துவிட்டு நிற்கிறோம்.


உணவகங்கள், திருமண நிகழ்ச்சிகள், பொது இடங்கள் என எங்கு சென்றாலும், அங்கிருக்கும் மேஜை நாகரிகத்துக்கேற்ப நாமும் பழகிவிட்டோம். விளைவு... அதே பழக்கம் வீடுகளிலும் தொடர் கதையாகிவிட்டது. இது கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற பரிணாம வளர்ச்சி. வெளியிடங்களுக்குச் செல்லும்போது சம்மணம்போட முடியாவிட்டாலும் வீட்டிலாவது சம்மணமிடும் பழக்கத்தை மீண்டும் கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.


இதையும் படியுங்கள் - அப்பாவை அதிகம் விரும்பும் பெண்களும் அதில் அடங்கியுள்ள ரகசியங்களும்


நாம் உண்ணும் உணவு முழுமையாகச் செரிமானமாக சம்மணமிட்டு உணவருந்தும் முறையே சிறந்தது. கீழே அமர்ந்து நமக்கு முன்னே இருக்கும் உணவைக் குனிந்து நிமிர்ந்து எடுத்துச் சாப்பிடும்போது, வயிற்றுத் தசைகளுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும்; செரிமானச் சுரப்பிகளும் தூண்டப்படும். சம்மணமிட்டு உணவருந்துவதால் ‘பசி அடங்கிவிட்டது’ என்ற உணர்வை மூளைக்குக் கடத்தும் நரம்பின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.


அதுவே நாற்காலியில் அமர்ந்து உணவருந்தினால், அந்த உணர்வு உடனடியாக மூளைக்குக் கடத்தப்படாமல், கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளும். இதனால் அதிக உணவு சாப்பிட நேரிடும். தேவைப்படும் கலோரிகளைவிட, அதிக கலோரிகள் உடலில் சேர்ந்து உடல்பருமனுக்கு வழிவகுக்கும். எனவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க ஆசைப்படுபவர்கள் சம்மணமிட்டு உணவருந்தும் பழக்கத்தை முதலில் பின்பற்ற வேண்டும்.


சம்மணமிட்டதும் பசி உணர்வு அதிகரிப்பது, நமது இயல்பிலேயே இருந்த ஒன்று. ஆனால், சம்மணமிடும் வழக்கத்தைக் கைவிட்டதால், பசி உணர்வு ஏற்படுவதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு, பசியை உண்டாக்கும் `சிந்தடிக்' மருந்துகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். கால்களை மடக்கி, தொடைப் பகுதியில் வைத்துக்கொள்ளும் ஆசன வகையான ’பத்மாசனத்தில்’ கிடைக்கும் பலன்களில் பாதி, சம்மணம் எனும் ‘சுகாசனத்தின்’ மூலம் கிடைக்கும். மேலும், உடல் உறுதிபெறுவதோடு, மூட்டு சார்ந்த நோய்கள் ஏற்படாது என்கிறது மருத்துவ நூல்.


பொதுவாகவே, சம்மணமிடுவதால் இடுப்பைச் சுற்றியுள்ள தசைகளுக்கு வலிமை கிடைப்பதுடன் இடுப்பு இணைப்புகளில் நெகிழ்வுத் தன்மை ஏற்படும். நாற்காலியில் கூனிக் குறுகி அமர்வதைப் போல இல்லாமல், தரையில் சம்மணமிட்டு நிமிர்ந்து அமரும்போது, உடலுக்கு நிலையான தன்மை உண்டாகும். களைப்பு நீங்கி சுறுசுறுப்புடன் உடல் இயங்க, சம்மணம் வழிவகுக்கும். உடலின் மேல் பகுதிக்கு ரத்தம் அதிகமாகப் பாயும். குருதியின் சுற்றோட்டத்தை அதிகரித்து, பல்வேறு நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். மனதை அமைதிப்படுத்தவும் ஒருநிலைப்படுத்தவும் சம்மணமிடும் முறை உதவும்.


இதையும் படியுங்கள் - பெண்கள் எப்போதும் தவறான கண்ணோட்டத்தோடு தான் பார்க்கப்படுகிறார்கள்


தினமும் சம்மணமிடுபவர்களுக்கு வாழ்நாள் அதிகரிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சம்மணமிட்டு அமர்ந்ததும் கைகளின் துணையில்லாமல், மேலே எழுவதை வைத்து (Sitting-rising-test) நமது ஆயுட்காலம் எவ்வளவு என்று நிர்ணயிக்கும் வழக்கமும் இருக்கிறது. அதாவது குறிப்பிட்ட நேரம் சம்மணமிட்ட பிறகு, எத்தகைய சோர்வுமில்லாமல் மீண்டும் எழுந்து நிற்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஆயுள் கெட்டி.


சிறுவயது முதல் சம்மணமிடும் முறையைப் பின்பற்றுபவர்களுக்கு, வயதான காலத்தில் உண்டாகும் சமநிலையின்மை சார்ந்த பிரச்னைகள் (Disorders related to Equilibrium) ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கிறது ஆய்வு.


குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் காக்க, வீட்டிலிருக்கும் டைனிங் டேபிளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, தரையில் அமர்ந்து உண்டு, உரையாடிக் களிப்போம். தரையில் பாய் விரித்து சுற்றமும் நட்பும் சூழ ஆசுவாசமாக அமர்ந்து கதைகள் பேசிய இனிமையான தருணங்களையும், விருந்து வீட்டில் தரையில் பெட்ஷீட்டை விரித்து, தரையில் அமர்ந்து உணவை ரசித்துச் சாப்பிட்ட அழகான நாட்களையும் மீட்டெடுப்பது நம் கையில்தான் உள்ளது. 

Post a Comment

Previous Post Next Post