சீனாவில் 4,300 க்கும் மேற்பட்ட டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுவடக்கு சீனாவில் உள்ள ஹெபே எனுமிடத்தில், 4,300 க்கும் மேற்பட்ட டைனோசர் கால்தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 


9,000 சதுர மீட்டர் அளவிலான பரப்பளவிற்கு, ஜுராசிக் மற்றும் கிரெட்டேசியஸ் காலகட்டத்திற்கு இடையில் பதிவான கால்தட அச்சுக்களாக அவை இருக்கலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவை பதிவாகி இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2020-ஆம் ஆண்டில், நக அச்சுக்களையும் உள்ளடக்கிய புதை படிவ கால்தடங்கள் முதன்முறையாகக் கண்டறியப்பட்டன. அவற்றோடு, இப்போது கிடைத்திருக்கிற கால்தடங்களையும் தொடர்புப் படுத்தி ஆராய்ச்சியாளர்கள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த அழிந்து போன உயிரினங்களின் கால்தடங்களை வைத்தே, அவற்றின் பல வாழ்வியல் முறைகளைக் கணிக்க முடியும் என்று சீனாவின் தினசரி ஒன்று கூறியுள்ளது. அந்த செய்திக் குறிப்பில், டைனோசர்களின் கால்தடங்களை வைத்தே அவற்றின் நீளம், எடை மற்றும் அளவு ஆகியவற்றை விஞ்ஞானிகளால் தீர்மானிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. மேலும், அவற்றின் நடையின் வேகத்தைக் கூட கண்டறிய முடியும் என்று கூறியுள்ளது.


சீனாவின் புவி அறிவியல் பல்கலைக்கழகத்தின் டைனோசர் நிபுணர் ஜிங் லிடா கூறுகையில் "இந்த கால்தடங்கள் டைனோசர்களின் வாழ்க்கைப் பழக்கம் மற்றும் நடத்தையைப் பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், டைனோசர்களுக்கும் அவற்றின் வாழ்க்கைச் சூழலுக்கும் இடையிலான உறவையும் விளக்குகிறது" என்று தெரிவித்துள்ளார்.


கண்டுபிடிக்கப்பட்ட கால்தடங்களைக் கொண்டு, அவை எந்த வகை டோனோசர்களாக இருக்கும்? என்ற விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அவை, இதுவரையில் கண்டறியப்படாத வகையினைச் சேர்ந்ததாகக் கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த கால்தடங்களின் சேகரிப்பில் தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகள் இரண்டையும் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். SCMP கூற்றுப்படி, "மாமிச உண்ணிகள் சிறிய அளவு கொண்டவையாக அறியப்படுகின்றன. அவை நான்கு முதல் ஐந்து மீட்டர் வரை மட்டுமே இருக்கும். அதே சமயம் தாவர உண்ணிகள் அளவில் பெரியதாகவும், 15 மீட்டருக்கும் அதிகமான நீளம் வரை வளரும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியானது, ஒரு காலத்தில் தண்ணீர் மற்றும் தாவரங்கள் அதிகமாக இருந்த இடமாக இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே, இந்தளவிற்குக் கூட்டமான கால்தடங்களைக் கண்டுபிடிக்க முடிந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். தற்போதும் அந்த பகுதியானது பெரிய புல்வெளியாகத் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post