தமிழர்களுக்காக போராடி வீழ்ந்த பிரபாகரனின் முழு வரலாறு


இலங்கை யாழ்ப்பாணத்தின் மேயரான ஆல்ப்ரட் துரையப்பா, யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள பொன்னாலை என்னும் ஊரில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்  செல்வதுண்டு. 1975-ஆம் வருடத்தில் அவரை கொலை செய்ய இளைஞர்கள் கூட்டம் ஒன்று திட்டமிட்டது.


அப்போது, கூட்டம் அதிகமாக இருப்பதால், திட்டத்தை தள்ளி வைக்கலாமா என்று பிற இளைஞர்கள் கூற, ஆயிரம் முறை பேசினாலும், தீர்வு ஒன்று தான் என்று உறுதியுடன் ஒரு குரல் ஒலித்தது. ஒரு துளி பயம், ஒரு துளி விஷத்திற்கு சமம். எனக்கு அது கிடையாது என்று கர்ஜித்தது  அந்த இளைஞரின் குரல். 


திட்டமிட்டபடி, துரையப்பாவை நேருக்கு நேராக நின்று சுட்டு கொன்றார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றிலேயே புதிய சகாப்தத்தை படைக்கவிருந்த அந்த 21 வயது இளைஞன் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, மாவட்ட நில அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.


சிங்கள அரசு, தமிழ் மக்கள் நிலத்தை அபகரிப்பது குறித்து வேலுப்பிள்ளை நண்பர்களுடன் பேசி  கொண்டிருப்பதை கவனமாக கேட்டுக் கொண்டிருப்பார் பிரபாகரன். அப்படி ஒருமுறை,  சிங்களர்கள் கோவில் குருக்களை தாக்கி, அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் தீ வைத்து கொன்றதை பதற்றத்துடன் கூறிக்கொண்டிருந்த தந்தை வேலுப்பிள்ளையிடம், அவர் ஏன் திருப்பி அடிக்கவில்லை என்று கேட்டார் பிரபாகரன்.


உயிர் போனாலும் திருப்பி அடிக்க கூடாது என்று சொல்லி வளர்க்கப்பட்ட  தந்தை செல்வாவின் கட்சியைச் சேர்ந்த வேலுப்பிள்ளைக்கு பிரபாகரனின் கேள்வி அதிர்ச்சியை தந்தது.  ஒடுக்கப்பட்டவர்கள், எதிர்த்து தாக்கினால் தான் அடக்குமுறையை நிறுத்த முடியும் என்று உறுதியாக நம்பினார் பிரபாகரன்.


இலங்கையில், சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே இருந்த இன வேறுபாடுகள், அங்கு நிலவிய பேரினவாத அரசியல் சித்தாந்தங்கள் இன வெறுப்பாக மாறியது. சிறுபான்மை தமிழர்களை தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கக்கூடிய பேரினவாத சட்டங்களை சிங்கள அரசு கொண்டு வந்தது.


இதனை எதிர்த்து, 'தந்தை செல்வா' என்று ஈழத்தமிழர்களால் அழைக்கப்பட்ட SJV.செல்வநாயகத்தின் தலைமையில், அமைதியான முறையில் தமிழர்கள் போராடினர். மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு சட்டம், தமிழர்களின் வாக்கு உரிமையை பறிக்கும் தேர்தல் திருத்தச் சட்டம், சிங்களத்தை ஆட்சி மொழியாக திணிக்கக்கூடிய தனிச்சிங்களச் சட்டம் போன்று சிங்கள அரசு தமிழர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தியது.


இளைய தலைமுறையினரின் கல்வி கனவுகளை மொத்தமாக சீர்குலைக்கும் வகையில், சிங்கள அரசு கல்வித் தரப்படுத்தல் சட்டத்தை கொண்டு வந்தது. பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்களின் சேர்க்கையை குறைக்க நினைத்த சிங்கள அரசு, அவர்களின் தகுதி தேர்வு மதிப்பெண்களை மிகவும் அதிகரித்தது.


சிங்களத்து மாணவர்களுக்கு குறைவான மதிப்பெண்களை நிர்ணயித்தது. இதனால் பொங்கி எழுந்த மாணவர் சமூகம் போராட்டங்கள் நடத்தியது. அதில் பயன் கிடைக்கவில்லை. அறவழிப் போராட்டங்களில் பலன் கிடைக்காது என்று, மாணவர்களும், இளைஞர்களும் தீர்மானித்தனர்.


எனவே, 1970ஆம் வருடம், சத்தியசீலன் தலைமையில் தமிழ் மாணவர் பேரவை உருவானது. அதில் சேர்ந்து கொண்டார் 15 வயதான சிறுவன் பிரபாகரன். அரசாங்கத்தை எப்படியாவது எதிர்க்க வேண்டும் என்று தீவிரமாக இருந்த பிரபாகரன், டிப்போவுக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் இல்லாத அரசு பேருந்திற்கு தீ வைத்தார்.


சிறிது நாட்கள் கழித்து, பிரபாகரனின்  வீட்டிற்கு சென்றார்கள் காவல்துறையினர். ஆனால் அதற்கு, முன்பே வீட்டிலிருந்து வெளியேறி நண்பர்களுடன் சேர்ந்து தலைமறைவாகினார் பிரபாகரன். ஆனால், தன் தந்தை வேலுப்பிள்ளையின் கண்களில் சிக்கினார்.


அப்போது அவரிடம் தன்னால் வீட்டுக்கு எந்த பயனும் இருக்காது. என்னை விட்டுவிடுங்கள் என்று கூறிவிட்டார். தனது  மகனை அரசாங்க பணியில் சேர்க்க வேண்டும் என்ற கனவில் இருந்தார் வேலுப்பிள்ளை.


ஆனால் ஈழத் தமிழர்களுக்கான ஒரு தனி அரசையே அமைக்கும் லட்சியத்தோடு மகன் இருப்பதை உணர்ந்து கொண்ட அவர் அதன்பிறகு பிரபாகரனை தடுக்கவில்லை.


குட்டி மணி, தங்கத்துரை, பெரிய சோதி, சின்னசோதி என்று போர் குணங்கள் கொண்ட நண்பர்கள் வட்டத்தை அமைத்துக்கொண்டார் பிரபாகரன். அதில் இவர் தான் இளையவர் என்பதால் தம்பி என்று தான் அவரை அனைவரும் அழைப்பார்கள்.


தம்பி என்று அனைவராலும் அவர் இறுதிவரை அழைக்கப்பட காரணமும் இது தான். 21 வயதில், ஆல்பர்ட் துரையப்பாவை சுட்டுக் கொலை செய்த பிரபாகரன் அந்த இடத்தில், புதிய தமிழ் புலிகள் என்னும் பதாகையை விட்டுச்சென்றார். அதனைத்தொடர்ந்து இளைஞர்கள் பலரும் புதிய தமிழ் புலிகள் அமைப்பில் சேர்ந்தனர்.


ஒரு காட்டுப்பகுதியில் அந்த இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சியை அளித்து, அந்த பகுதிக்கு 'பூந்தோட்டம்' என்று பெயர் வைத்தார் பிரபாகரன். ஆயுத பயிற்சிக்கு நிதி தேவைப்பட்டதால்  புத்தூர் அரசு வங்கியை தேர்ந்தெடுத்த பிரபாகரன், தென் இலங்கை மக்களுக்கு மட்டும் அதிகம் வரி விதிக்கப்படுவதாக கருதியதால், முதல் வங்கி கொள்ளையை நடத்தினார்.


1976-ஆம் வருடத்தில், மே மாதம் 5 -ஆம் தேதி, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உருவாக்கப்பட்டது. நாகராஜ், செல்லக்கிளி, விஸ்வேஸ்வரர், ஐயர் மற்றும் பிரபாகரன் ஆகிய 5 பேர் உடைய மத்திய குழு உருவாக்கப்பட்டது. 


இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் மற்றும் இராணுவத் தளபதியாக இருந்தார் பிரபாகரன்.  இயக்க உறுப்பினர்கள் புகைப்பிடிக்கவோ, மது அருந்தவோ கூடாது எனவும் பாலுறவும் கூடாது என்று கடும் சட்டங்களை கொண்டு வந்தார்.


ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு விடுதலைப் புலிகளின் தனித்தன்மையாக இருந்தது.


இதனிடையே, 1977ஆம் வருடத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து நடத்திய வட்டுக்கோட்டை மாநாட்டில் தனி தமிழ் ஈழ நாட்டை நிறுவுவோம் என்ற தீர்மானத்தை  நிறைவேற்றினர். அந்த வருடத்திலியே தந்தை செல்வா மரணமடைந்தார்.


தமிழ் அரசியல் கட்சிகள் சேர்ந்து அமைத்த தமிழர் விடுதலைக் கூட்டணி, வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம்  தேர்தலில் வெற்றி பெற்றனர்.


எதிர்க்கட்சி தலைவரான கூட்டணியின் தலைவர், அமிர்தலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் வாய்ப்பை வைத்து தமிழீழ கொள்கையை பலப்படுத்துவேன் என்றார். ஆனால், ஒரு சட்ட திருத்தத்தை வைத்து அதிகாரத்தை மொத்தமாக தன் பக்கம் மாற்றிக்கொண்டார் அதிபர் ஜெயவர்தனே.


1977ஆம் வருடம் தமிழர்கள் மீது ஜெயவர்த்தனே அரசு தாக்குதல் நடத்தியது. கொழும்பு உள்ளிட்ட பிற பகுதியை சேர்ந்த தமிழர்களை வட கிழக்கு  பகுதியை நோக்கி விரட்டி அடித்தனர். 111 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். 25,000 மக்கள் குடியிருப்புகளை இழந்தனர். 60,000 மலையகத் தமிழர்கள் இடம்பெயர்ந்தார்கள்.


100 கோடி மதிப்புடைய தமிழர்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இவற்றைத் தடுக்க முடியாமல் இருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம். தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் தேர்தலில் வெற்றிபெற்று, தமிழர்களுக்கு துரோகம் செய்து  விட்டதாக கூறி, எம்.பி கனகரத்தினம் உட்பட 11 நபர்களை கொன்று குவித்தது விடுதலைப் புலிகள். திகைத்துப்போனது இலங்கை அரசு.


இலங்கை முழுக்க விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்த பேச்சுக்கள் ஒலித்தது. விடுதலை புலிகள் அமைப்பை அதிபர் ஜெயவர்தனே தடை செய்தார். காவல்துறையினரின்  கெடுபிடிகள் அதிகரித்ததால், பிரபாகரன் சென்னைக்கு சென்று விட்டார். அங்கு இயக்க தோழரான உமாமகேஸ்வரனுடன் மோதல் ஏற்பட்டதால், சென்னை காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.


போராளிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசு வைத்த கோரிக்கையை  அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஏற்க மறுத்துவிட்டார். 1981-ஆம் வருடத்தில் புகழ்பெற்ற யாழ்ப்பாண நூலகத்தை சிங்கள இன வெறியர்கள் தீ வைத்து கொளுத்தினர். சுமார் 94,000 புத்தகங்கள் தீயில் கருகி நாசமானது.


இந்த சம்பவம் தன் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி, சுதந்திர தமிழீழத்திற்கான உத்வேகத்தை பல மடங்கிற்கு அதிகரித்தது என்றும் பிரபாகரன் கூறியிருக்கிறார். 1983ஆம் வருடத்தில், சிங்கள அரசின் இன வெறித் தாக்குதலில் 3,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். சிறையில் இருந்த 54 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள்.


சுதந்திர தமிழீழத்தை காண்போம் என குட்டிமணியும், தங்கதுரையும் முழக்கமிட்டதால்  அவர்களின் கண்களை தோண்டிய சிங்கள அதிகாரிகள் அதனை காலில் போட்டு மிதித்ததாக கூறப்பட்டது. கருப்பு ஜூலை என்று அழைக்கப்பட்ட அந்த வன்முறை, இந்தியப் பிரதமரான  இந்திரா காந்திக்கு பேரிடியை தந்தது.


எனவே, இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் தமிழர்கள் மீது இனப்படுகொலை நடக்கிறது என்று அறிவித்தார். மேலும், தாக்குதல்களை நீங்கள் நிறுத்தப்போகிறீர்களா? இல்லை நாங்கள் நிறுத்த வேண்டுமா? என்று ஜெயவர்தனாவை எச்சரித்தார். அதற்கு பின், தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது.


மேலும், போராளிக் குழுக்களுக்கு இந்தியாவில் ராணுவ பயிற்சி வழங்கப்பட்டது. இதற்காக, எம்ஜிஆர், 2 கோடி ரூபாய் நிதி வழங்கினார்.


1984ஆம் வருடத்தில் பிரபாகரன், மதிவதனியை திருமணம் செய்தார்.


கனல் கிட்டுவின் உறுதுணையுடன் புலிகள் அமைப்பு வேகமாக வளர தொடங்கியது. பெண்களை திரட்டி ,பெண் படை அணியை உருவாக்கினார். மேலும், புலிகள் அமைப்பினர், சிங்கள ராணுவத்திடம் சிக்கினால், தங்களிடமிருந்து அமைப்பு குறித்து எந்த தகவலும் கசியாமல் இருக்க, கழுத்தில் மாட்டி உள்ள சயனைடு குப்பியைக் கடித்து வீரமரணம் அடையும் வழக்கத்தை பின்பற்றினர்.


இராணுவ அறிவியலில் புலிகள் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார்கள். 1987-ஆம் வருடத்தில் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தை கைப்பற்ற சிங்கள இராணுவம் தாக்குதலை தொடங்கியது. பல தமிழ் இளைஞர்களை கைது செய்து அரசு சுட்டுக் கொன்றது. மேலும், இந்திய அரசங்கம் அனுப்பி வைத்த உணவு கப்பல்களை அதிபர் ஜெயவர்தனே திருப்பி அனுப்பினார்.


எனவே, 'ஆபரேஷன் பூமாலை, என்ற பெயரில் விமானங்களின் மூலமாக உணவுப்பொட்டலங்களை மக்களிடம் வீசுமாறு, ராஜீவ் காந்தி உத்தரவிட்டார். சிங்கள இராணுவத்தை எதிர்கொள்ள கரும்புலிகள் என்னும் தற்கொலைப்படை உருவாக்கியிருந்தார் பிரபாகரன்.


1987ம் வருடம், வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனத்தை இயக்கிச் சென்று ராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தினர் முதல் கரும்புலி கேப்டன் மில்லர். அதை கண்டு அதிர்ந்து போன  இலங்கை அரசு ராஜீவ் காந்தியிடம் உதவி கேட்டது. ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையெழுத்தானது.


13-வது சட்டத்திருத்தம் என்ற பெயரில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அமைக்கப்பட்டு  அதிகாரங்கள் பகிர்ந்து வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. புலிகள், ஆயுதங்களை ஒப்படைத்து விட வேண்டும் எனவும், அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.


இந்திய அமைதிப்படை, தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் என்றும் உறுதி கூறப்பட்டது. இது குறித்து, 1987 ஆம் வருடம், சுதுமலையில் முதல் தடவையாக மக்களின் முன் பொதுக்கூட்டத்தில்  பிரபாகரன் பேசினார்.


"நாங்கள் ஆயுதங்களை கொடுக்கவில்லை எனில், இந்திய இராணுவத்துடன் மோதும் நிலை உண்டாகும், அதனை நாங்கள் விரும்பவில்லை, தமிழீழத் தனியரசு இதற்கு நிரந்தரமான தீர்வை கொடுக்கும் என்று கூறிய பிரபாகரன், ஆயுதங்களை ஒப்படைத்து விட்டார்.


இந்திய அமைதிப்படை, இலங்கைக்கு வந்தவுடன் ஈழத் தமிழர்கள் வரவேற்பளித்தனர். ஆனால் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்பு, பிற போராளிக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாக புலிகள் குற்றம் சாட்டினர். மேலும், தமிழர்கள் பகுதிகளிலும் சிங்களக் குடியேற்றங்கள் நடந்தது.


எனவே, ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை உண்மையில் நடைமுறைப்படுத்த கோரி, திலீபன் 1987-ஆம் வருடத்தில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். நீர் கூட அருந்தாமல் 12 நாட்கள் கழித்து மரணித்தார். இது தமிழீழ மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  


பிரேமதேசா புதிய அதிபராக பதவியேற்றார். அதனைத்தொடர்ந்து, இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து வெளியேறியது. அதன் பின்பு, 1990-ல் இலங்கை அரசின் ராணுவ தாக்குதலை வெற்றிகரமாக முறியடிப்பதும், சுய ஆட்சி டைய வட கிழக்கு தமிழ் நிலப்பரப்பை நிர்மாணிப்பதும் என்று தீவிரமாக செயல்பட்டார் பிரபாகரன்.


கடற்புலிகள், சார்லஸ் ஆண்டனி தாக்குதல் படையணி, நீரடி நீச்சல் பிரிவுகள் என்று உருவாக்கப்பட்டன. தமிழீழ காவல்படை, நீதிமன்றம், வைப்பகம் புலிகளால் உருவாக்கப்பட்டது. புலிகளின் முதல் கள பலியான, லெப்டினன்ட் சங்கரின் நினைவு நாள், நவம்பர் மாதம் 27ஆம் தேதி. அன்றைய தினம், மாவீரர் நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தனர்.


1990 முதல் மாவீரர் நாளில், ஒவ்வொரு வருடமும், பிரபாகரன், 'மாவீரர் நாள்' உரையை வாசிப்பார். அந்த நாளுக்காக ஈழத் தமிழர்கள் மட்டுமன்றி, உலகம் முழுக்க பரவி இருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒட்டுமொத்தமாக வருடந்தோறும் காத்திருப்பார்கள். 1994-ஆம் வருடத்தில் அதிபர் சந்திரிகாவுடனான பேச்சு வார்த்தையை முடிவுக்கு வந்த பின், 1995-ஆம் வருடத்தில் 3ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கியது.


சிங்கள இராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ளமுடியாமல் புலிகள் பின்வாங்கியது. புதிய தாக்குதல் உத்திகளை பிரபாகரன் வகுத்தார். அதன்பின்பு, 'ஓயாத அலைகள்' என்னும் பெயரில் தொடர் தாக்குதல்கள் நடத்திய புலிகள், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற பகுதிகளை மீட்டது. அப்போது, நார்வே நாட்டின் சமாதான பேச்சுவார்த்தை தொடங்கியதால், நல்லெண்ணத்தின் அடிப்படையில், பிரபாகரன் போர் நிறுத்தத்தை அறிவித்தார்.


போர் நிறுத்தம் முடிந்த அடுத்த நாள், சிங்கள அரசு தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக, 2001-ஆம் வருடத்தில், கொழும்பில் இருக்கும் கட்டுநாயகா விமானப் படைத்தளத்தின் மீது புலிகள் தாக்குதலை மேற்கொண்டு, முற்றிலுமாக அழித்தனர். அதன்பிறகு, நார்வேயின் தலைமையில் நடந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில், இலங்கை அரசு கையெழுத்திட்டது.


2006ஆம் வருடத்தில் அதிபர் தேர்தலில் புலிகள் மீது போர் தொடுக்கப் போவதாக அறிவித்த மஹிந்த ராஜபக்ஷ வெற்றியடைந்தார். முல்லை தீவில் இருந்த செஞ்சோலை மீது சிங்கள ராணுவம் குண்டு வீசியதில் 61 குழந்தைகள் உயிரிழந்தனர். இதனையடுத்து, நான்காம் கட்ட ஈழப் போரில் புலிகள் ஈடுபட்டனர்.


அமெரிக்காவில், இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் உலகம் முழுக்க போராளிக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் தொடர்ந்தது. புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் அமெரிக்கா இணைத்தது.


இந்தியா, சீனா போன்ற 27 நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்தன. தமிழ் மக்கள் மீது கொத்துக்குண்டுகள் வீசிய சிங்கள ராணுவம், கிழக்கு பகுதியை கைப்பற்றியது. பள்ளிக்கூடங்களும், மருத்துவமனைகளும் தகர்க்கப்பட்டது. சிங்கள அரசின் கொடூரத்தை வெளிக்கொண்டு வந்த சிங்கள பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். ஆதாரங்கள் இல்லாத போராக கடைசி போர் நடந்தது.


2008-லிருந்து தீவிரமாக நடந்த போரில், ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.  2009ஆம் வருடம் மே மாதம் 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் சுமார் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கடும் சோகத்துடன் இறுதிப் போர் முடிந்தது. விடுதலைப் புலிகளின் தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர்.


உச்ச கட்டமாக, 30 வருடங்கள் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை வழி நடத்திய மாவீரன் பிரபாகரனின் கொன்று அவரின் உடலை சிங்கள ராணுவத்தினர் சிதைத்தனர். மக்களின் அரசியல் உரிமைகளை, அமைதியாக கோரிக்கை வைத்து எப்போதும் பெற முடியாது.


அதை விடாப்பிடியாக, போராட்டத்தின் மூலம் தான் பெறமுடியும் என்று தீர்க்கமாக நம்பி,  ஒடுக்கப்பட்டு கிடந்த ஓர் இனத்தின் உறுதிமிக்க தலைவராக அடக்குமுறையை நேருக்கு நேராக எதிர்த்த மாவீரன் பிரபாகரன், தமிழ் மக்களின் மக்களின் நெஞ்சங்களில், தமிழ் வரலாற்றில்  எப்போதும் நிறைந்திருப்பார்...


Post a Comment

Previous Post Next Post